Thursday, April 28, 2016

ப்ரியங்கரீ

பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - நீர்



யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
'யார் நீ' என்கிறேன்.
'பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்' அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.

புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 



2 comments:

shivameasarvam said...

தன் நிலை மாறாத (பொருளுக்கு ) நீருக்கு தண்ணீர் எனறு பெயர், நீரின்றி அமையாது உலகு. உயிர்?

அரிஷ்டநேமி said...

அதையும் நீங்கள் தான் கூற வேண்டும் அண்ணா.