எப்பொழுதாவது
தான் நிகழ்கிறது
வாங்கும்
ஒன்பதாயிரத்து சொச்சத்தில் மீதம்.
உடைந்து
போன கைக்கடிகாரம்
மாற்றாமல்
அலையும் கணவனுக்காக
வாங்கத்
துடிக்கிறது மனசு ஒன்று.
போன முறை
நல்லியில் பார்த்து வந்த
பச்சையும்
சிகப்பு பார்டரும் வைத்த
காஞ்சி காட்டனை
நினைவுட்டுகிறது
மனசு ஒன்று.
‘ரங்கநாதன்
வீதியில்
சில ஆயிரங்களில்
பார்த்து வந்த
கம்மலையும்
கழுத்து மாலையையும்
வாங்கித்
தருகிறாயா’
என்னும்
மகளின் வார்த்தைகளை
நினைவுட்டுகிறது
மனசு ஒன்று.
அம்மாவுக்கு
குக்கர் வாங்கித் தருவதாக
சொன்னதை
நினைவுட்டுகிறது
மனசு ஒன்று.
காலம் அறியாமல்
வந்து நிற்கும்
உறவின் திருமணத்திற்கு
பரிசு வாங்க
வேண்டும் என
நினைவுட்டுகிறது
மனசு ஒன்று.
வேர்வை படிந்த
ஈர உடைகளுடன் மகன் வந்து
‘விஜய் போட்டிருக்கும்
ஷு மாதிரி வாங்கித் தருகிறாயா?’
என்கிறான்.
இயல்பாய் புன்னகை
செய்வதை விட
என்ன செய்துவிட
முடியும் மத்யமரால்.புகைப்படம் : Vinod Velayutham.
இது எனது 400 வது கவிதை.
எனது நெருக்கமான தோழிகளில் சிலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களே இது. கட்டமைப்பு மட்டுமே படைப்பு.
தேவைகளின்
பொருட்டு வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் உலகளாகிய அனுபவம் பெறுகிறாள்.
ஆணின் மிகப் பெரிய வலிகளை எல்லாம் பெண்கள் சர்வ சாதாரணமாகக் கடக்கிறார்கள். கடந்து செல்லும் எல்லா பெண்களின் கண்ணிலும் உப்பு நீர் படிந்தே இருக்கிறது. மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் அதைக் காட்டுகிறார்கள். மற்றவர்களிடம் அது மாயப் பூச்சாகவே இருக்கிறது. அதன் பொருட்டே இக்கவிதை.
இக் கவிதைகளில் அதன் அடி ஆழத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதே நிதர்சனம். எல்லா கவிதைகளுக்கு பின்னும் அதன் அடி நாதம், வலி, வேதனை, சந்தோஷ சிறகசைப்புகள், கிழக்கும் மேற்கும் செல்லும் மனநிலை, மெய் தீண்டல்கள், துரோகங்கள், பரிகசிப்புகள், ஏமாற்றங்கள், அதன் பொருட்டான அனுபவங்கள். தாலாட்டுகள், கவிதை பரிமாற்ற அனுபவங்கள், அதன் பொருட்டான கோபங்கள், பின்னொரு புன்னகைக் காலங்கள் என பலவும் இக்கவிதைகளின்
வழி கடந்திருக்கிறேன்.
கடந்திருக்கிறேன் என்பதே கடந்ததை
குறிக்கிறது. வேறு என்ன இருக்கிறது மத்யமராய் வாழ்வதைத் தவிர.
1 comment:
மத்தியமர் என்பது நடுத்தரவர்க்கத்தினர் என்பதான குறியீடு.(சுஜாதா பயன்படுத்தியது)
எப்பொழுதாவது தான் சேமிப்பு என்பதோ, காசு வருவதோ நிகழ்கிறது. அவ்வாறான தொகை பெறும் முன்னமே எதிர்காகத்தில் இதை வைத்து என்ன செய்யலாம் என மனம் எண்ணத்துவங்கி விடுகிறது. ஆனால் அதற்கு முன்பே நிதர்சனங்கள் வந்துவிடுகின்றன என்பதின் வெளிப்பாடே இக்கவிதை.
தொடர்ந்து வாசிக்க,.
http://areshtanaymi.in/
Post a Comment