Monday, February 23, 2015

முகத்துவாரம்




பஞ்ச பூத கவிதை வரிசையில் – நீர்


வழிந்தோடும் ஆற்றில்
மூழ்குதலும் எழுதலும் முதல் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
காற்றுக் குமிழ்கள் பின் தொடர்ந்து பேசத் துவங்குகின்றன.
நாங்கள் உன்னைச் சார்ந்தவர்கள்
உன் நினைவுகள் என்கின்றன.
'யவன பருவத்தில் நீ விளையாடிய
விளையாட்டுகள்' என்று கூறி
உடைகிறது ஒரு குமிழ்
'உனக்கான பள்ளி நாட்களே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
'கொண்ட காதல் நினைவுகளே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
'நண்டின் கால் உடைத்து
நறுமணம் கொண்டு உண்ட நினைவுகளே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
'பெற்ற பேரும் அதன் பொருட்டான பெரும் துயரமும் நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
மூழ்குதலும் எழுதலும் இரண்டாம் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
பணிவில் பெற்ற வெற்றிகளும்,
பணிந்து பெற்ற வெற்றிகளும் நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
'தேவைகளின் பொருட்டு நீ கொண்ட வேஷங்களே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
'நிறம் மாறிய குடும்ப அமைப்புகளே நான்'
என்று கூறி உடைகிறது பிறிதொரு குமிழ்.
'உருண்டோடி உடையும் குமிழ்கள் எனக்கானவை எனில்
எது நான்' என்கிறேன்.
சொற்கள் அழிந்து சூன்யம் தொடங்குகையில்
மூழ்குதல் மூன்றாம் முறை நிகழ்கிறது
பின் தொடர்கிறது பிரணவ ஒலி

*முகத்துவாரம் - ஆறு கடலில் சேரும் இடம்
புகைப்படம் :  SL Kumar

No comments: