செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல.
பூக்களை சுமந்து செல்லும் மணம்
நகரும் வரை காத்திருக்க வேண்டும்.
அவைகளை தழுவ வரும் தேனீக்கள்
செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
புற உலகின் வளர்ச்சிக்கு சமமான
அக வேர்களையும்
வேரின் வேர்களையும் அவைகளின் முழு வடிவம்
காணும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறப்பு கொள் இலைகள்
வெளிர் பச்சை நிறம் மாறும் வரை
காத்திருக்க வேண்டும்.
நேற்று வண்ணம் சுமந்த பூக்கள்
இன்று வேரில் விழுந்து கிடக்கும்
காரணம் காண காத்திருக்க வேண்டும்.
அறிந்து கொண்ட பின்னே அறியமுடியும்
செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல என்று.
புகைப்படம் : Vinod V
No comments:
Post a Comment