Saturday, September 24, 2016


வாசிப்புகளைத் தொடர எனது http://areshtanaymi.in பக்கத்திற்கு வாருங்கள். நன்றி.

Tuesday, June 21, 2016

அனிச்சை நிகழ்வுகள்



எப்பொழுதாவது தான் நிகழ்கிறது
வாங்கும் ஒன்பதாயிரத்து சொச்சத்தில் மீதம்.
உடைந்து போன கைக்கடிகாரம்
மாற்றாமல் அலையும் கணவனுக்காக
வாங்கத் துடிக்கிறது மனசு ஒன்று.
போன முறை நல்லியில் பார்த்து வந்த
பச்சையும் சிகப்பு பார்டரும் வைத்த
காஞ்சி காட்டனை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
‘ரங்கநாதன் வீதியில்
சில ஆயிரங்களில் பார்த்து வந்த
கம்மலையும் கழுத்து மாலையையும்
வாங்கித் தருகிறாயா’
என்னும் மகளின் வார்த்தைகளை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
அம்மாவுக்கு குக்கர்  வாங்கித் தருவதாக
சொன்னதை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
காலம் அறியாமல் வந்து நிற்கும்
உறவின் திருமணத்திற்கு
பரிசு வாங்க வேண்டும் என
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
வேர்வை படிந்த ஈர உடைகளுடன் மகன் வந்து
‘விஜய் போட்டிருக்கும் ஷு மாதிரி வாங்கித் தருகிறாயா?’
என்கிறான்.
இயல்பாய் புன்னகை செய்வதை விட
என்ன செய்துவிட முடியும் மத்யமரால்.

புகைப்படம் :  Vinod Velayutham.


இது எனது 400 வது கவிதை.

எனது நெருக்கமான தோழிகளில் சிலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களே இது. கட்டமைப்பு மட்டுமே படைப்பு.
தேவைகளின் பொருட்டு வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் உலகளாகிய அனுபவம் பெறுகிறாள். ஆணின் மிகப் பெரிய வலிகளை எல்லாம் பெண்கள் சர்வ சாதாரணமாகக் கடக்கிறார்கள்.  கடந்து செல்லும் எல்லா பெண்களின் கண்ணிலும் உப்பு நீர் படிந்தே இருக்கிறது. மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் அதைக் காட்டுகிறார்கள். மற்றவர்களிடம் அது மாயப் பூச்சாகவே இருக்கிறது. அதன் பொருட்டே இக்கவிதை.
இக் கவிதைகளில்  அதன் அடி ஆழத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதே நிதர்சனம். எல்லா கவிதைகளுக்கு பின்னும் அதன் அடி நாதம், வலி, வேதனை, சந்தோஷ சிறகசைப்புகள், கிழக்கும் மேற்கும் செல்லும் மனநிலை, மெய் தீண்டல்கள், துரோகங்கள், பரிகசிப்புகள், ஏமாற்றங்கள், அதன் பொருட்டான அனுபவங்கள். தாலாட்டுகள், கவிதை பரிமாற்ற அனுபவங்கள், அதன் பொருட்டான கோபங்கள், பின்னொரு புன்னகைக் காலங்கள் என பலவும் இக்கவிதைகளின் வழி கடந்திருக்கிறேன்.
கடந்திருக்கிறேன் என்பதே கடந்ததை குறிக்கிறது. வேறு என்ன இருக்கிறது மத்யமராய் வாழ்வதைத் தவிர.


Sunday, June 19, 2016

தெளிவுறு சித்து



தடைபடா மௌனத்தில்
ஒடுங்குமிறது
நாதமும்


* தெளிவுறு சித்து -தெளிந்த சித்தம் - திருமந்திரம் 1064
புகைப்படம் : Karthik Pasupathy

Friday, June 3, 2016

வல்வினைக் காடு



பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - காற்று

அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
'என்னைத் தெரியவில்லையா?' என்கிறது
'விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறது' என்கிறேன்.
'செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்' என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
'காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழி' என்கிறது.
'யார் நீ?' என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள் 'நானே வாலை'.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.


*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து

Sunday, May 29, 2016

சோளக்கொல்லை பொம்மை




காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு நாளில்
வேறு சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள் அற்று வினவுகிறேன்.
'மற்ற பொம்மைகளின் படிச் செலவு
மாதம் விடுத்து தினமாகிறது' என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள் அற்றுக் கிடக்கிறது 
பொம்மை ஒன்று,
சில காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன 
அப் பொம்மையை.

புகைப்படம்: Karthik Pasupathy



Tuesday, May 24, 2016

பௌர்ணமி நாட்கள்




மகளால் வரையப்படும்
கிறுக்கல்களால் அழகு பெறுகின்றன
நாட்களும்.

புகைப்படம் :  Swathika Senthil

Saturday, May 14, 2016

திசை அறிதல்




பாதங்களின் நிழல் பற்றி
நடந்து செல்லும் பாதைகளில்
தடம் பதியாது பறந்து செல்கிறது
பறவையின் நிழல் ஒன்று.

புகைப்படம் :  Karthik Pasupathy