Showing posts with label அன்னை. Show all posts
Showing posts with label அன்னை. Show all posts

Friday, June 3, 2016

வல்வினைக் காடு



பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - காற்று

அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
'என்னைத் தெரியவில்லையா?' என்கிறது
'விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறது' என்கிறேன்.
'செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்' என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
'காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழி' என்கிறது.
'யார் நீ?' என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள் 'நானே வாலை'.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.


*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து

Thursday, April 28, 2016

ப்ரியங்கரீ

பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - நீர்



யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
'யார் நீ' என்கிறேன்.
'பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்' அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.

புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 



Monday, February 15, 2016

மௌனச் சொற்கள்


பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - நிலம்




விடியாத இரவொன்றில்
விழி வைத்து வீதி வழி நடக்கிறேன்.
பாதம் கொண்ட பாதைகள் எல்லாம்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
பாதைகள் மயானம் நோக்கி
பயணிக்கின்றன.
சன்னமாய் கொலுசின் ஒலிகள்
சலங்கைகள் ஆகின்றன.
'மயானக் கொல்லை மாதேவியே
மனதில் உன்னைக் கொண்டேன்' என்கிறேன்.
'என்னைக் கண்டவரும் இல்லை
காலின் சிலம்பு சப்தமும் கொண்டவரில்லை
என் பெருங் கோபம் அறிவாயா என்கிறது' காளி.
ஊழிப் பெரு முதல்வனுடன் நித்திய தாண்டவம்
உயிர் அறும் சேய்களின் முதலும் முடிவுமான வீடு நீ' என்கிறேன்.
பெரு மூச்சு  ஒன்றை விட்டு நகர்கிறது அக்காளி.
காற்றில் தேயாதிருக்கின்றன
சலங்கைகளின் ஒலிகள் மட்டும்.

புகைப்படம்  : காளியாட்டக்_கலைஞர்_சிவபால்

Thursday, May 30, 2013

குருஷேத்ரம்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப் பட்டாலும்,
பிரிவுகள் மட்டும்
பூமியில் நிச்சயிக்கப்படுகின்றன.

Wednesday, December 14, 2011

உணர்வின் வாசனை


பல தேசம் சென்றும்
பல உணவினை ருசித்த பின்னும்
மாறாமல் இருக்கிறது
அம்மாவிடம் அடி வாங்கிய பின்
அழுத படியே
உண்ட உணர்வின் வாசனை.

Saturday, November 5, 2011

கடவுளைக் காணல்


மீண்டும் ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றம்
உன் வலியை உள் வலியை
உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார்.
வலி உண்டாக்கி தருணத்தை
விவரிக்க சொன்னார்.
தெருவில் நடந்து செல்பவனை
அப்பா என்று எனது மகள்
முதல் முறையாய் அழைத்ததை
செவிலித் தாய் சொன்ன போது
என்றேன்.
பதில் அளித்த தருணதில்
உண்ர்ந்தேன் கடவுளை.

Wednesday, April 21, 2010

சந்தோஷத்தின் சாயல்


காய்கறி விற்பவளின்
இடிப்பினில் இருக்கும் குழந்தை
கைகளை ஆட்டியபடி சொன்னது
ஜிங்கிலி ஜிங்கிலி

Tuesday, March 23, 2010

வாசனைகள்


எப்போதாவது பூக்கின்றன
குறிஞ்சிப் பூக்கள்.
தாயின் மடியினில் இருந்து
தலையசைக்கின்றன சில பூக்கள்.
கைகளை அகல விரித்து
கண்களைக் காட்டி
பயமுறுத்துகின்றன சில பூக்கள்.
முடிவில்லா பயணத்தில்
முழுநீள புன்னகையோடு சில பூக்கள்.
பூக்களின் சிந்தனையில்
பூரணமான வலி வயிற்றினில்
கருமை நிறைந்த இரவுப் பொழுதினில்
எங்கு சென்று தேடுவது
மளிகைக் கடையையும் மருந்துக் கடையையும்
எப்பொதும் பூக்கின்றன
காட்டுச் சாமந்திகள்