Showing posts with label மகிழ்வுறு மனைவி. Show all posts
Showing posts with label மகிழ்வுறு மனைவி. Show all posts

Sunday, November 15, 2015

மௌனக் கண்ணீர்




உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
'இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்'
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
'ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்'
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
'பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்கு' என்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
'ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல'
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

Friday, August 29, 2014

ஆகாய அலைகள்

ஆற்று நீரின் வாசம்
மனதுக்குள்.
நேர் எதிரில் நிலா.
மெதுவாய் பாதம் பிடித்து விடுகிறேன்.
இதழ் வழி புன்னகைப் பூக்கிறாய்.
பேச்சுக்கள் தொடர்கின்றன.
நேர் மேலே நிலா.
‘தேகம் பொய்’ எனில்
‘நினைவுகளும் பொய்யா’ என்கிறேன்;
என்றைக்குமான புன்னகையை வீசுகிறாய்.
சுற்றிலும் கொட்டிக்கிடக்கின்றன
பூக்களும் நினைவுகளும்.
பதிலுக்காக மீண்டும்
கேள்வி தொடுக்க துவங்குகிறேன்.
அறை எங்கும் ஒலிக்கிறது ஒரு குரல்.
'வேளா வேளைக்கு சோறு தின்னுட்டு
சாமி கும்பிடாம
என் உயிர எடுக்கிறான் உங்கப்பன்'.

புகைப்படம் : R.s.s.KClicks

Sunday, November 17, 2013

தரிசனம்
















யாரும் அற்ற நிலவொளி
மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்காக,
நமக்காக மட்டும்.
சுற்றி ஒலிக்கின்றன வண்டின் ஒலிகள்.
'சந்தோஷத்தின் கால அளவு பெரிதா,
வலியுடன் கூடிய காயங்களின் 
கால அளவுகள்  பெரிதா' என்கிறேன்.
'காலடித் தடம் படா இடங்கள் உண்டு
காயம் படா இதயங்கள் உண்டா' என்கிறாய்.
நிலையற்று போகிறது நினைவுகள்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
'எவ்வளவு நேரமா டீவீ பொட்டில
பொம்பளய பாப்பீங்க'

Click by : Karthik Pasupathi

Saturday, October 26, 2013

கொண்டாடுதல்

வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Wednesday, October 2, 2013

கனவுகளில் தேடல்

இலக்கு நோக்கிய தேடல்கள்,
அடைந்தபின் மீண்டும் தேடல்.
நித்திய தேடல்களில் தொலைகிறது
நிச்சயமற்ற வாழ்வு.


















Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Wednesday, September 25, 2013

ரகசியமாய்..

நீண்ட நாட்களுக்கான பிறகான
சந்திப்பு உன்னுடன்.
காற்று உன் கூந்தலைத் தழுவிச் செல்கிறது.
'என்ன வேண்டும்' என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
'வண்ணமும் வாசமும்
சுவையுடன் கூடிய உணவா வேண்டும்' என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நிறைந்த மலர்கள் வேண்டுமா' என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
'சிறந்த உடைகள் வேண்டுமா' என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நாட்களின் நகர்தலை
ஒத்து இருக்கிறது என் கேள்விகள்.
அப்போதும் மௌனத்திருக்கிறாய்.
'என்னதான் வேண்டும்' என்கிறேன்.
பெண்களால் மட்டுமே அறியப்படும்
ரகசிய புன்னகையைச் சிந்தி
'நீ வேண்டும்' என்று
என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய்.
ரகசியமாய் அழும் ஆண்களின்
வரிசையினில் நானும்.

Thursday, September 12, 2013

ஆத்ம விசாரம்

காற்றினில், கருமை இருளில்
கரைந்திருந்தன உன் கண்கள்
தங்கக் கூந்தலாய் உன் கேசம்.
அனைத்தும் அளிக்கும் உள்ளத்தோடு நீ.
கலங்கிய மனதுடம் நான்,
வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள் என்று
எனக்கான வினாக்களை அடுக்குகிறேன்.
விழி அசைத்து அனைத்துக்கும்
விடைஅளிக்கிறாய்.
உறு பொருள் உரைக்குமாறு கேட்கிறேன்.
காற்றில் ஆடுகின்றன வார்த்தைகள்
'வட்டி காசுக் கட்டச் சொல்லி
வக்கில் நோட்டீஸ் வந்திருக்குன்னு
உங்கப்பனான்ட சொல்லு.

Sunday, September 8, 2013

இல்லானை இல்லாளும் வேண்டாள்

பொருளற்றவனை
எளிதில் புரிந்து கொண்டு
குரைக்க துவங்கி விடுகின்றன
மிருகங்களும்.

*இல்லானை இல்லாளும் வேண்டாள் - ஔவை

Tuesday, July 2, 2013

மிலேச்ச தேசம்

ஒருபுள்ளியில் உருவம் அற்று
வெற்றிடத்தில் வேண்டுவன தந்து
தவித்து, தனித்து
நிழலாடி
கனவினை விதைக்கிறது
உன் வரைபடங்கள்.
எண்ணப் பகிர்தலுக்கு
எதிர் அணியில் நான்.
காட்சிகள் கவிதையாக்கம்
கொள்கின்றன.
எட்டும் தூரத்தில் ஒரு குரல்
'கட்டைல போறவன்
தின்னுட்டு சாமி கும்பிட வேண்டியதுதானே'




*மிலேச்ச தேசம் - மரபுகளைக் கைவிட்ட தேசம்

Friday, June 21, 2013

வார்த்தைகளின் ரசவாதம்

நீண்ட நாட்களுக்கான பிறகான
உரையாடலில் சந்தோஷம் பிறந்தது.
'சாமி கொடுத்த வரம்' நீ என்கிறேன்.
'சாமி கண்ணத்தான் குத்தும்-
ன்னு அம்மா சொன்னாள்' என்கிறாய்.
வரம் கொடுத்த தெய்வம்
வார்த்தைகளை இரைத்தலில்
வசமாகிப் போனது இதயம்.














Image - Internet

Tuesday, June 18, 2013

தாடகை

'எங்கு சென்றாய் என்னை
தவிர்த்தும் தன்னித்தும் விட்டு'
என்கிறேன்.
தவிர்த்தல் உன்நிலை அன்றி
எனதில்லை என்கிறாய்.
வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன.
உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன

அங்கம் ஹரே:புனகபூஷன
      மாச்ரயந்தீ *

எங்கிருந்தோ வருகிறது
நெருப்பின் கங்குகள்
'செட்டியார் கடைக்குப் போய்
நோட்ல எழுதிட்டு
சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன'.

*ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

Thursday, June 13, 2013

லீலாவினோதினி

உணவுப் பரிமாற்றத்தில்
நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம்.
'ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு
திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு'
என்கிறாள் உன் அன்னை.
'அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா'
என்கிறாய்.
தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.

Thursday, May 30, 2013

குருஷேத்ரம்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப் பட்டாலும்,
பிரிவுகள் மட்டும்
பூமியில் நிச்சயிக்கப்படுகின்றன.

Tuesday, May 7, 2013

ப்ரேமரூபா


யாருமற்ற இரவில்
வெற்றுப் புள்ளியாய் நீ.
மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய்.
உன் கண்ணசைப்பில்
கைக்குழந்தையாகிறேன்.
என் காதலைச் சொல்ல துணிகிறேன்.
'ஸ்துலத்தையா, சூட்சமத்தையா' என்கிறய்.
விழி அருவி மடைதாண்டி
பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது.
இராவணன் இராமனான பொழுதினை ஒத்து
தன்னை இழத்தல் நிகழ்கிறது.
ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில்.
"கிழத்துக்கு இழுக்குது,
இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான்
செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன்,
போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா".

Tuesday, April 23, 2013

உபாதி


நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
'விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல'
என்று கூறி அவ்விடம் அகன்றார்.

Tuesday, April 9, 2013

லயம்


எனக்கான கடை நாள் வலிகளை
கண்ணீருடன் விவரிக்கிறேன்.
நித்தியமானவனுக்கு
நித்தம் வலி ஏனோ
என்று விரல் பிடித்து
தலையினைக் கோதி
முத்தம் பதிக்கிறாய்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
கிழம் பாயில படுத்து
அழுது அழுது
உயிரை எடுக்குது.

போய் சேர்ந்தாலும் நிம்மதியா இருப்பேன்.
தூரத்தில் நாய்களின் அழுகை ஒலி.

Friday, March 15, 2013

அவித்யா


தூரத்தில் நிலவொளி.
வீசிக் செல்லும் பனிக்காற்று.
குளிர் தவிர்த்தலுக்கான உடைகள்
மெல்லிய விரும்பிய இசை.
காவியம் முதல் காப்பியம் வரை
பேசும் உன் திறமைகள்.
விரும்பிய உணவினை
உண்ணத் தொடங்கி
பேச முற்படுகையில்
ஒலிக்கிறது ஒரு குரல்.
நாஷ்டா துன்ன கூட வராம
தூங்குற உங்கப்பனை
எழுந்திருக்க சொல்லுடா.

Saturday, October 13, 2012

வல்லமை தாராயோ


நீண்ட நெடும் தூக்கதிற்கு
தயாரய் மனமும் உடலும்.
எதிர்படும் தலைவலிகள்
என்றைக்குமான தொடர்ச்சியாய்.
வலி பெரியதா, மருந்திடவா
என்கிறாய்.
வலியினை நீக்கும் மருந்தாய்
விரல்களும் உன் வார்தைகளும்.
இன்னும் இருக்கும் வலியை
உரைக்கிறேன் உன்னிடத்தில்.
அடுத்தவங்கள பாடா படுத்தினா
வலி எப்படி போவும்.
வார்தைகளின் முடிவில்
முடிவில்லா பயணம்.

Friday, January 6, 2012

கவிதையின் தோற்றம்


ஒரு முறை கடவுளை
சந்திக்கையினில்
லட்சிய கவிதைகள்
எப்பொழுது வாய்க்கும் என்றேன்.
காதலித்துப் பார்
கவிதை வரும் என்றார்.
மறுதலித்து மற்ற
வழியினைக் கேட்டேன்.
கணவனாகிப் பார்.
லட்சம் கவிதைகள் வரும் என்றார்.
எழுதப் படாத கவிதைகள்
எண்ணிலி என்றும் பகன்றார்.

Friday, December 23, 2011

தொடரும் நினைவுகள்


என்னுள்ளே எட்டிப் பார்த்தத்
என்றொ கடந்த அனுபவ மேகங்கள்
வழிந்தொடும் ஆறு
அதனுள் குதித்தாடிய நினைவுகள்,
வாய்க்கால் தாண்டி வயல்,
பனியுடன் கூடிய பஜனைப் பாடல்கள்,
பாடல்களை தொடரும்
பட்டாம் பூச்சிகள்
அனைத்தும் தாண்டி....
ஒங்கி ஒலிக்கும்
என்றைக்குமான ஒரு குரல்
'லீவு நாள்னா இதுதான் வேலை'