Showing posts with label பசி. Show all posts
Showing posts with label பசி. Show all posts

Sunday, May 29, 2016

சோளக்கொல்லை பொம்மை




காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு நாளில்
வேறு சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள் அற்று வினவுகிறேன்.
'மற்ற பொம்மைகளின் படிச் செலவு
மாதம் விடுத்து தினமாகிறது' என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள் அற்றுக் கிடக்கிறது 
பொம்மை ஒன்று,
சில காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன 
அப் பொம்மையை.

புகைப்படம்: Karthik Pasupathy



Saturday, May 14, 2016

திசை அறிதல்




பாதங்களின் நிழல் பற்றி
நடந்து செல்லும் பாதைகளில்
தடம் பதியாது பறந்து செல்கிறது
பறவையின் நிழல் ஒன்று.

புகைப்படம் :  Karthik Pasupathy

Tuesday, May 3, 2016

பயன் இயல்



தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.

‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்
புத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;

நினைவுகளில் மூழ்கி இருக்கையில்
தேனீர் பற்றி இருக்கும் சிகரெட்
விரல்களை சுட்ட தருணங்களை
உங்களுக்கு தந்திருக்கலாம்;

தொலைபேசியில் சிரித்துப் பேசியபடி
சந்தோஷங்களை உங்களுக்கு
தந்த தருணமாக இருந்திருக்கலாம்;

யாசிப்பின் மொழி அறிந்து
பெற்ற பெரும் செல்வத்தில்
பசியினை அறுக்க பருகும்
தருணமாக இருந்திருக்கலாம்;

தன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து
மீதமிருக்கும் சில்லறைகளில்
பிஸ்கோத்து வாங்கி,  நாயிக்கு அளித்து
தானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்
தருணமாக இருந்திருக்கலாம்;

மனிதர்களால் விலக்கப்பட்டு
வலிகளின் அடிநாதம் அறிந்து
பிறிதொரு நாளில்
பருகும் கடைசி பாகமாகவும் இருக்கலாம்.

தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.

புகைப்படம் :  Ram N



Tuesday, April 12, 2016

தீப்புகு விட்டில்


பாரம் கடந்த இரவொன்றை
இருவர் கடந்தனர்
அவனுக்கான பயணம் கிழக்கானது
அவளுக்கான பயணம் மேற்கானது.
வரும் காலங்களின் திட்டங்களோடு அவன்;
கடந்த காலங்களின் அசைவுகளோடு அவள்.
குளிர் இடத்தில் வளரும் போன்சாய்
மரங்களின் இலைகளை வருடியபடி அவன்.
மாற்றம் கொண்ட
குளிர் இடத்தில் வளரும் பாம்பூ
செடிகளின் இலைகளை வருடியபடி அவள்.
நாளொன்றின் முடிவில்
பாரம் கடந்த பகலொன்றை
இருவரும் கடந்தனர்.
பின்னொரு பொழுதுகளில்
இருள் தனித்து இருந்தது.

* தீப்புகு விட்டில் - நெருப்பில் புகுந்த விட்டில் பூச்சி  - திருவாசகம் / நீத்தல் விண்ணப்பம்
புகைப்படம் : Jothi Vel Moorthi 

Friday, March 11, 2016

வல்வினை நோய்


தந்தையின் தோள் பற்றி இருக்கும்
பெண் குழந்தை ஒன்று
தலை திருப்பி
‘எனக்கு இப் பொம்மை வாங்கி தருவாயா’ என்கிறது.
காரணம் விளக்காமல்
மறுதலித்து
நடக்கத்துவங்குகிறான் தகப்பன்.
சில வினாடிகளுக்குப் பின்
தகப்பன் மனம் மாறலாம் என
பொம்மை விற்பவன் தலை திருப்புகிறான்.
தொலை தூரத்தில் குழந்தையும்
தலை திருப்புகிறது
நிறைவேறா நிமிடங்களுக்காக
காலம் உறைந்திருக்கிறது.

புகைப்படம் : R.s.s.K Clicks

Saturday, March 5, 2016

மெருகேறும் மௌனம்






செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல.

பூக்களை சுமந்து செல்லும் மணம்
நகரும் வரை காத்திருக் வேண்டும்.

அவைகளை தழுவ வரும் தேனீக்கள்
செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.

புற உலகின் வளர்ச்சிக்கு சமமான
அக வேர்களையும்
வேரின் வேர்களையும் அவைகளின் முழு வடிவம்
காணும் வரை காத்திருக்க வேண்டும்.

பிறப்பு கொள் இலைகள்
வெளிர் பச்சை நிறம் மாறும் வரை
காத்திருக்க வேண்டும்.

நேற்று வண்ணம் சுமந்த பூக்கள்
இன்று வேரில் விழுந்து கிடக்கும்
காரணம் காண காத்திருக்க வேண்டும்.

அறிந்து கொண்ட பின்னே அறியமுடியும்
செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல என்று.

புகைப்படம் : Vinod V

Wednesday, February 24, 2016

ஆர்த்த பிறவி


பொம்மைகளுக்கு ஏது தனி வாழ்வு?
ஆட்டுவிப்பவன் இருக்கும் வரையில்
அனு தினமும் ஆடும் பொம்மைகள்.
கயிறு அறுபட்ட பொம்மைகள்
தனித்து வீதி அடையும்.
நாளின் பிற்பகுதியினில்
களிமண்ணில் இருந்து உயிர் பெறும்.
கலைகின்றன பொம்மைகளின் வேஷங்கள்;
கலைகின்றன பொம்மைகளின் கனவுகள்.
நிஜம் தேடும் நித்திய வாழ்வு;
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
மீண்டும்
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
பிறிதொரு நாளில்
அனைத்திற்கும் பிறகும்
நிலைபெற்றிருக்கும் பிரணவாகார ஒலி.
மௌன நாதத்தில் ஒடுங்கும் மனமும்.

புகைப்படம் :  Karthik Pasupathi
*ஆர்த்த பிறவி துயர் கெட - திருவாசகம்

Sunday, November 22, 2015

ஆதி ஆகுதி




தன் மீது அமரும்
வண்ணத்துப் பூச்சியின்
வலிஅறிந்து இருக்குமா அம்மலர்கள்

புகைப்படம் :  SLKumar

Sunday, November 15, 2015

மௌனக் கண்ணீர்




உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
'இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்'
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
'ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்'
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
'பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்கு' என்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
'ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல'
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

Wednesday, November 4, 2015

முதிர் ஞாபகங்கள்


தேகம் முழுவதும் பூச்சுக்கள் என்றாலும்
தன்னியல்பாய் வெளிப்பட்டு விடுகின்றன
பழைய வாசனைகள்.

புகைப்படம் :  Ravi Shankar

Monday, October 12, 2015

சொல்லின் வழி மௌனம்



யாருமற்ற இரவு
உன்னையும் என்னையும்
இணைத்து வைக்கிறது.
கொஞ்சமாய் அகிலின் வாசம்
நம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
உடைபடும் மௌனம் உடைக்கிறேன்.
மானஸ ரூபின்யை நமஹ,
..
மகாரப் பிரியை நமஹ
பிறிதொரு பொழுதுகளில்
எந்தப் பொருளிலும் நான் இல்லை
எல்லாப் பொருள்களிலும் நீ இருக்கிறாய்.
எந்த ஒலிகளையும் நான் கேட்கவில்லை
எல்லா ஒலிகளுக்கும்  நீ காரணமாக இருக்கிறாய்.
எந்த உருவங்களையும் நான் காணவில்லை
எல்லா உருவங்களுக்கும்  நீ சாட்சியாக இருக்கிறாய்.
மூலக் கனலொன்று கனவினை உடைக்கிறது.

புகைப்படம் : இணையம்