Showing posts with label பஞ்ச பூதக் கவிதைகள். Show all posts
Showing posts with label பஞ்ச பூதக் கவிதைகள். Show all posts

Friday, June 3, 2016

வல்வினைக் காடு



பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - காற்று

அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
'என்னைத் தெரியவில்லையா?' என்கிறது
'விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறது' என்கிறேன்.
'செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்' என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
'காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழி' என்கிறது.
'யார் நீ?' என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள் 'நானே வாலை'.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.


*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து

Thursday, April 28, 2016

ப்ரியங்கரீ

பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - நீர்



யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
'யார் நீ' என்கிறேன்.
'பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்' அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.

புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 



Monday, February 15, 2016

மௌனச் சொற்கள்


பஞ்ச பூதக் கவிதைகள் - பெண் தெய்வங்கள் - முன்வைத்து - நிலம்




விடியாத இரவொன்றில்
விழி வைத்து வீதி வழி நடக்கிறேன்.
பாதம் கொண்ட பாதைகள் எல்லாம்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
பாதைகள் மயானம் நோக்கி
பயணிக்கின்றன.
சன்னமாய் கொலுசின் ஒலிகள்
சலங்கைகள் ஆகின்றன.
'மயானக் கொல்லை மாதேவியே
மனதில் உன்னைக் கொண்டேன்' என்கிறேன்.
'என்னைக் கண்டவரும் இல்லை
காலின் சிலம்பு சப்தமும் கொண்டவரில்லை
என் பெருங் கோபம் அறிவாயா என்கிறது' காளி.
ஊழிப் பெரு முதல்வனுடன் நித்திய தாண்டவம்
உயிர் அறும் சேய்களின் முதலும் முடிவுமான வீடு நீ' என்கிறேன்.
பெரு மூச்சு  ஒன்றை விட்டு நகர்கிறது அக்காளி.
காற்றில் தேயாதிருக்கின்றன
சலங்கைகளின் ஒலிகள் மட்டும்.

புகைப்படம்  : காளியாட்டக்_கலைஞர்_சிவபால்

Wednesday, May 27, 2015

மேலாம் எழுத்து


பஞ்ச பூத கவிதை வரிசையில் - நெருப்பு

காலத்தின் சுழற்சியில்
நான் என்னில் இருந்து விலகுகிறேன்.
உடல் மட்டும் பிரகாசமாய் நெருப்பில்
எரிந்து கொண்டு இருக்கிறது.
தோழமையாய் ஒரு பேச்சினை
தொடங்குகிறது ஆதி நெருப்பு.
சுற்றிலும் மணி ஓசைகள் ஒலிக்கின்றன
‘உன் உருவாக்கத்திற்கு காரணம் நானே
என்னில் புனிதப்படாதவை எதுவும் இல்லை’ என்கிறது
சுற்றிலும்  தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன.
‘ஆதி பசியினை நீ அறிவாயா,
நெற்றிக்குள் சுடர் கொண்டவன்
இன்னுமா நீ அறியவில்லை என்கிறது
சுற்றிலும்  வண்டுகள் ஒலிக்கின்றன.
பொருள்களை தூய்மை செய்வது என் பொருப்பு.
உலகப் பொருள்களில் நீ இருப்பதால் நீயும் என் பொருப்பு என்கிறது.
சுற்றிலும்  சங்க நாதம் தொடர்கிறது.
இடம் பெயர்தலில் என் பங்கு முக்கியமானது என்கிறது.
சுடர் அடங்க தொடங்குகிறது.
தொடர்கிறது பிரணவ கார ஒலி.
முற்றுப் பெறுகிறது நீண்ட நெடும் பயணம்.
தொடங்குகிறது புதிய விதிமுறைகளுடன்
ஆட்டம் ஒன்று.

  

* மேலாம் எழுத்து - பரநாத ஒலி - திருமந்திரம் - 1212
புகைப்படம் :  Virtualcitizen India

Friday, May 15, 2015

வியோமம்



கைகளில் இருக்கும் குழந்தை ஒன்று
விழி உயர்த்தி ஆகாயம் காட்டுகிறது.
ஆகாயத்தின் கூறுகள்
என்னில் பிரதிபலிக்கின்றன
காற்று மண்டலம் தாண்டிய
அது பேசத் துவங்குகிறது.
'ஒலிகளின் மூலப் பிரதி நானே,
'ஒளிகளும் என்னுள் அடங்கும்' என்கிறது.
வார்தைகள் மௌனத்தில் உறைகின்றன.
'என்னில் கரையாதவை எவையும் இல்லை' என்கிறது
‘நானே முதல் படைப்பு.
எல்லை கடந்த பொருள்’ என்றும் கூறுகிறது
உன் உலகம் என் உலகம்
உன் படைப்பு என் படைப்பு ' என்கிறது.
‘எனில் எப்பொழுது உன் முழுமையை உணர முடியும்’ என்கிறேன்
‘ஓடு உடைத்தால் நீயே நான்’ என்கிறது.
தொடர்கிறது சங்க நாதம்.

வியோமம் - ஆகாயம், திருமந்திரம் - 1152

புகைப்படம் : Gayu

Saturday, May 9, 2015

பரப்பினன்



பஞ்ச பூத கவிதை வரிசையில் - காற்று

கனத்த மௌனம் கொண்ட
நிமிடம் ஒன்றில்
உடல் தழுவி சென்றது காற்று.
மெல்லிய குரலில் அவைகள்
பேசிக் கொள்ளத் துவங்கின.
‘நீ யார்’ என்கிறேன்.
‘நானே நீ. நான் அற்று நீ ஏது’ என்கிறது.
‘இது நாள் வரை அறியவில்லை உன்னை’ என்கிறேன்.
‘அறியப்படாததால் நான் அற்று நீயா’ என்கிறது.
‘உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள் கொடி உறவு’ என்கிறது
‘கமற்று இருப்பதால் உங்களை அறிய முடியவில்லையா’ என்கிறேன்.
மற்று இருப்பதால் தானே அறிகிறாய் என்கின்றன.
'யாவரும் உங்களை அறிவார்களா,
அறியும் தருணம் எது' என வினாக்கள் விரைகின்றன.
தொலை தூர மயான காற்றில்
கலந்திருக்கிறது பிண வாடைகள்.

பரப்பினன் - பரப்பினள் என்பதன் ஆண்பால் - ஞானிகளால் ஆராயப்பெற்ற பரந்த இடமாக விளங்குபவன், திருமந்திரம் - 1070


புகைப்படம் - இணையம்

Monday, February 23, 2015

முகத்துவாரம்




பஞ்ச பூத கவிதை வரிசையில் – நீர்


வழிந்தோடும் ஆற்றில்
மூழ்குதலும் எழுதலும் முதல் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
காற்றுக் குமிழ்கள் பின் தொடர்ந்து பேசத் துவங்குகின்றன.
நாங்கள் உன்னைச் சார்ந்தவர்கள்
உன் நினைவுகள் என்கின்றன.
'யவன பருவத்தில் நீ விளையாடிய
விளையாட்டுகள்' என்று கூறி
உடைகிறது ஒரு குமிழ்
'உனக்கான பள்ளி நாட்களே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
'கொண்ட காதல் நினைவுகளே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
'நண்டின் கால் உடைத்து
நறுமணம் கொண்டு உண்ட நினைவுகளே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
'பெற்ற பேரும் அதன் பொருட்டான பெரும் துயரமும் நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
மூழ்குதலும் எழுதலும் இரண்டாம் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
பணிவில் பெற்ற வெற்றிகளும்,
பணிந்து பெற்ற வெற்றிகளும் நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
'தேவைகளின் பொருட்டு நீ கொண்ட வேஷங்களே நான்'
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
'நிறம் மாறிய குடும்ப அமைப்புகளே நான்'
என்று கூறி உடைகிறது பிறிதொரு குமிழ்.
'உருண்டோடி உடையும் குமிழ்கள் எனக்கானவை எனில்
எது நான்' என்கிறேன்.
சொற்கள் அழிந்து சூன்யம் தொடங்குகையில்
மூழ்குதல் மூன்றாம் முறை நிகழ்கிறது
பின் தொடர்கிறது பிரணவ ஒலி

*முகத்துவாரம் - ஆறு கடலில் சேரும் இடம்
புகைப்படம் :  SL Kumar

Sunday, February 1, 2015

நித்ய யாசகன்




பஞ்ச பூத கவிதை வரிசையில் - நிலம்


ஒரு விடியலில்
பாதையினில் தனித்த பயணம் தொடர்கிறது.
பிரதிபலிப்பில் நிழல் விழுந்த நிலம்
'என்னைத் தெரிகிறதா
எனப் பேசத் தொடங்குகிறது.
ஆமாம்நான் தான் நீஎன்கிறது.
வினாக்கள் விழி அசைவுகளை நிறுத்தி வைக்கின்றன..
முன்னொரு தினத்தில்
நீ எருவாக இருந்தாய்,
பின் விதையானாய்,
பின் மரம் ஆனானாய்,
பூவானாய்காயானாய்கனியானாய்,
பின் மாண்டு எருவானாய்’ என்கிறது.
படைப்பின் நோக்கம் குறித்து வினவுகிறேன்.
'படைப்புகள் படைத்தவனுக்கு மட்டுமே சொந்தம்'
எனும் பதில் வருகிறது.
படைப்புகளின் நேர்த்தியும், நேர்த்தியின்மை குறித்தும்
கேள்விகள் எழுகின்றன.
'காலங்களுக்கு கட்டுப்பட்டது தானே
அனைத்து பிரபஞ்சங்களும் அதன் உட்பொருள்களும்'
என்றாய் பதில் வருகிறது.
சுழற்சியின் காலம் பற்றி வினவுகிறேன்.
'நீயும் நானும் ஒன்று எனில்
காலம் குறித்து என்ன சொல்லமுடியும்என்கிறது.
முன்னே தவழ்ந்து செல்லும் குழந்தை ஒன்று
தன் கைகளால் நிலம் கீறி எழுதிச் செல்கிறது
'ஓம் சிவோகம்'.



புகைப்படம் : இணைய தளம்